You Are Here: Home » தமிழ்நாடு » சுற்றுலா சென்றபோது விபத்து: சென்னை அருகே பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்து 22 பேர் பலி

சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்தில், ஆந்திர மாநில எல்லையையொட்டி அமைந்துள்ளது பழவேற்காடு ஏரி. வங்க கடலின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள இந்த ஏரி, இந்தியாவிலேயே 2-வது பெரிய உப்புநீர் ஏரி ஆகும். 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பிரமாண்ட ஏரி சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

இந்த ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்வதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். கிறிஸ்துமஸ் தினமான நேற்று இந்த ஏரியில் மிகப்பெரிய துயர சம்பவம் நிகழ்ந்தது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி வள்ளலார் நகர் பெரியதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் நகரைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் (வயது 68). இவர் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் பாண்டியன் ஓட்டல் என்ற பெயரில் ஓட்டலும், பல்பொருள் அங்காடியும் நடத்தி வருகிறார். இவரது குடும்பத்தினர் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடினார்கள்.

பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு பிரியாணியும் கேக்கும் வழங்கி தங்கள் அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார்கள்.   ஒவ்வொரு ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று சுந்தரபாண்டியன் குடும்பத்தினர் சுற்றுலா செல்வது உண்டு. அதே போல் நேற்றும் சுந்தரபாண்டியன், அவரது மனைவி, மகன்கள் உள்பட அவரது குடும்பத்தினர் 22 பேர் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிவிட்டு பகல் 11 மணி அளவில் பழவேற்காடு ஏரிக்கு சுற்றுலா சென்றனர்.

அவர்களுடன், சுந்தரபாண்டியனின் பல்பொருள் அங்காடியில் வேலை பார்க்கும் அனிதா (20) என்ற பெண்ணும் சென்றார். இவர் புதுகும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த விநாயகமூர்த்தி என்பவரின் மகள் ஆவார். அங்கு அவர்கள் ஒரு படகில் ஏறி, ஏரிக்குள் சென்றனர். படகை அன்சாரி என்பவர் ஓட்டினார்.

அன்சாரின் மனைவி நசீரா பானுவும் (20) அவர்களுடன் சென்றார். அங்குள்ள ஒரு தீவுக்கு சென்ற அவர்கள் அங்கு அமர்ந்து மதிய உணவு அருந்தினார்கள். பின்னர் அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் படகில் ஏரி கரைக்கு புறப்பட்டனர். படகு முகத்துவாரத்தை தாண்டி வந்தபோது எதிர்பாராத விதமாக பலத்த அலைகள் எழுந்தன.

அந்த அலைகளில் சிக்கி அங்கும் இங்குமாக தள்ளாடிய படகு திடீரென்று கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த அனைவரும் அலறியபடி ஏரிக்குள் விழுந்தனர். சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி 22 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இந்த பயங்கர விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் வடக்கு மண்டல ஐ.ஜி. சைலேந்திரபாபு, போலீஸ் சூப்பிரண்டு வனிதா, டி.எஸ்.பி. குமார், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், வெங்கடேசன் ஆகியோரும் தீயணைப்பு படை வீரர்களும் அங்கு விரைந்து சென்றனர்.

மேலும் பொன்னேரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்ராஜா, பொன்னேரி ஆர்.டி.ஓ. கந்தசாமி ஆகியோரும் பழவேற்காடு ஏரிக்கு விரைந்தனர். அங்கு அவர்கள் விபத்து நடந்த இடத்துக்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக மீனவர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

பலியானவர்களில் 5 ஆண்கள், 7 பெண்கள், 4 குழந்தைகள் ஆகிய 16 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டனர். மீட்கப்பட்ட உடல்களில் 6 வயது சிறுவன், 6 மாத குழந்தை ஆகியோரின் உடல்களும் அடங்கும். அதற்குள் இருட்டி விட்டதால் மீட்புப்பணி பாதிக்கப்பட்டது.

இந்த விபத்தில் 3 சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். படகு கவிழ்ந்ததும் அதில் இருந்து தண்ணீருக்குள் விழுந்தவர்களில் ஜனகராஜ் (13), பால் தினகரன் (10), பவுல்ராஜ் (12) ஆகிய மூன்று பேரும் படகை பிடித்துக் கொண்டு தத்தளித்தபடி கிடந்தனர். அவர்களை மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். இவர்களில் ஜனகராஜும், பால் தினகரனும் சுந்தரபாண்டியனின் பெரிய மகன் ஜெயதுரையின் மகன்கள் ஆவார்கள்.

இந்த விபத்தில் படகை ஓட்டிச் சென்ற அன்சாரியும் உயிர் தப்பி விட்டார். இந்த விபத்தில் பலியானவர்களில் 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள போதிலும் சிலரது உடல்கள் மட்டும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கோர விபத்தில் பலியான சுந்தரபாண்டியனின் பூர்வீகம் நெல்லை மாவட்டம் இட்டமொழி ஆகும். சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் அவர் தனது குடும்பத்தினருடன் கும்மிடிப்பூண்டி வந்தார்.

Print This Page Print This Page
© 2011 Makkal Murasu · Subscribe:PostsComments · · Powered by Vindia Web Labs