புதுதில்லி, மார்ச்.9 தில்லியில் தொடங்கி நடைபெற்றுவரும் உலக
கோப்பை ஹாக்கி தொடரின் "ஏ' பிரிவு லீக் போட்டியில், வெற்றி பெற்றால்
மட்டுமே அரையிறுதி வாய்ப்பு என்ற நிலையில், ஜெர்மனி அணி நியுசிலாந்து
அணியை எதிர்கொள்கிறது.
12வது உலக கோப்பை ஹாக்கி தொடர் தில்லியில்
நடக்கிறது. "ஏ' பிரிவில் இன்று கடைசி சுற்று லீக் போட்டிகள் நடக்கிறது.
இதில் உலக ரேங்கிங் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஜெர்மனி அணி,
நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
ஜெர்மனி, 8 புள்ளிகளுடன் உள்ளது.
இன்றைய போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே ஜெர்மனி
அரையிறுதிக்கு முன்னேற முடியும். ஒருவேளை தோல்வியடையும் பட்சத்தில்,
நடப்பு சாம்பியன் அந்தஸ்தை இழக்க நேரிடும்.
இரண்டு வெற்றி, இரண்டு
தோல்வியை என்று 6 புள்ளிகளுடன் உள்ள நியூசிலாந்து அணி, அரையிறுதிக்கு
முன்னேற வாய்ப்பு உள்ளது. முதலில் இன்றைய போட்டியில் ஜெர்மனி அணியை
வீழ்த்த வேண்டும். அதேவேளையில் இன்று நடக்கும் மற்றொரு போட்டியில்
நெதர்லாந்து அணி, கொரியாவை வீழ்த்த வேண்டும் அல்லது "டிரா' செய்ய வேண்டும்.
"ஏ'
பிரிவில் நடக்கும் மற்றொரு லீக் போட்டியில், ஆசிய சாம்பியனான தென் கொரியா
அணி, உலக தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணியை
சந்திக்கிறது. இதுவரை இரண்டு வெற்றி, ஒரு "டிரா', ஒரு தோல்வியை
சந்தித்துள்ள தென் கொரியா அணி (7 புள்ளி), அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு
உள்ளது.
முதலில் இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணியை அதிக கோல்
வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அதேவேளையில் நியூசிலாந்து அணி,
ஜெர்மனியை வீழ்த்த வேண்டும் அல்லது "டிரா' செய்ய வேண்டும். ஒருவேளை
ஜெர்மனி வெற்றி பெறும் பட்சத்தில், நெதர்லாந்து, தென் கொரியா அணிகளுக்கு
இடையில், கோல் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறும் அணி தேர்வு
செய்யப்படும்.
நெதர்லாந்து அணி, அரையிறுதிக்கு முன்னேற தென் கொரியா அணியுடன் குறைந்த பட்சம் "டிரா' செய்தாலே போதுமானது.
இன்று
நடக்கும் மற்றொரு "ஏ' பிரிவு லீக் போட்டியில் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை
இழந்த கனடா, அர்ஜென்டினா அணிகள், உலக கோப்பை அரங்கில் முதன்முறையாக
மோதுகின்றன. இதுவரை விளையாடிய நான்கு லீக் போட்டியிலும் தோல்வி கண்ட கனடா
அணி, இன்று ஆறுதல் வெற்றியை நோக்கி களமிறங்குகிறது. நியூசிலாந்து அணியை
வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்த அர்ஜென்டினா அணி, 2வது வெற்றிக்காக
விளையாடுகிறது.